உலகில் காணப்படும் 8650 பறவையினங்களில் 1200 வகை பறவையினங்கள் இந்தியாவில் காணலாம் என்கிறார்கள். ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது அது மனிதனுக்கு தொடர்பில்லாத ஜீவராசியாகவோ பார்க்கத் துவங்கிவிட்டானோ என்ற சந்தேகம் எழுகிறது.
சரி நாம் ஏன் பறவைகளை கவனிக்க வேண்டும்?
பறவைகள், விலங்குகள் அல்லது புழு பூச்சிகள் மனிதர்கள் சிறப்பாக பூமியில் வாழ்வதற்கு மிகவும் சிறப்பான வேளைகளை செய்கின்றன என சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனா். மனிதர்கள் தாங்கள் மட்டுமே இந்த பூமிக்கு முக்கியமானவர்கள் என்றும், மனித இனத்தால்தான் இந்த பூமி நிலைத்து இருக்கிறது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் விலங்குகள், புழு-பூச்சிகள் இந்த உலகில் இல்லையென்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழமுடியாது என்பதே உண்மை!
அதுபோலவே பறவை இனங்களும் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கிறது!
மனித இனத்திற்காக பறவைகள் மரங்களின் விதைகளை விதைக்கும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தை தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக விதைகளை எச்சம் மூலம் விதைக்கின்றன. இதில் மனிதர்களாகிய நாம் பெரும் பயனடைகின்றோம்.
பறவைகள் உணவு உண்ணும்போது விதைகளுடன் சேர்த்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டவை. அந்த விதையை எச்சமாக வெளியேற்றி புதிய தாவரங்கள் முளைக்கச் செய்கின்றன. ஓரிடத்தில் இருந்து தாவரங்களைப் பல இடங்களுக்கு பறவைகள் செல்லும் இடங்களிளெல்லாம் பரப்புகின்றன. இத்தகைய விதைப் பரவல் மனிதர்களால் சாத்தியப்படாத ஒன்று. கடல் தாண்டும் பல பறவைகள் உலகம் முழுவதும் நாடு விட்டு நாடு விதைகளை விதைத்து கொண்டிருக்கிறது.
பவளப்பாறைகளை வளர்ப்பதிலும், கடற்பாசிகளை வளர்ப்பதிலும் கடல் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வந்து திரும்பி செல்லும்போது கடலில் இருக்கும் பாறைகளில் தனது எச்சத்தை விதைத்துச் செல்லும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான தீவுகளில் காடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் எச்சத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றது.
நம்மூர்களில் இன்று நாம் பார்க்கும் மர வகைகளில் பல வேம்பு, அத்தி, அரசு, ஆலம், புளியமரம் போன்ற பல மரங்கள் பறவைகளின் எச்சங்களால் தானாக வளர்ந்தவையே..!
இதுபோன்றே கொய்யா, சப்போட்டா, நாவல், சீத்தா, இலுப்பை, கொடுக்காய் புளி போன்ற மரங்களிலிருந்து பழங்களைத் தின்னும் பறவைகள் அதன் விதைகளை தான் செல்லும் இடங்களிளெல்லாம் இடுகின்றன. 'புல்புல்' பறவைகள் மகிழம் செண்பகம் போன்ற பூ மரங்களின் கனிகளை விரும்பி உண்கின்றன; காக்கைகள் வேப்பம்பழங்களை விரும்பி உண்ணும் மரம்நடும் தன்னார்வத் தொண்டர்களாகவே மாறிவிடுகின்றன. பறவைகளுக்குப் பிடித்த அரசு, ஆலம், அத்தி போன்றவற்றின் பழங்களின் விதைகள் வெகுவாகப் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
பறவைகள் ஒரு வருடத்திற்கு 400 முதல் 500 மில்லியன் டன் பூச்சிகளை சாப்பிடுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. சீனாவில், ஹவுஸ் ஸ்விஃப்ட் (House Swift) என்ற இன பறவையானது மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தை பாதிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. அமெரிக்காவில் ஈவனிங் கிராஸ்பீக் (Evening grosbeak) என்ற பறவையானது, 1,820 டாலர் செலவழித்து போக்க வேண்டிய பூச்சிகளை அழித்து சூப்பர் ஹீரோவாகத் திகழ்கிறது. ஐரோப்பா முழுவதும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பறவைகளைப் பயன்படுத்திவரும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.
மகரந்தச் சேர்க்கை என்றாலே தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும்தான் சட்டென ஞாபகத்திற்கு வரும். ஆனால் தேன் குடிக்கும் பறவைகளும், சிட்டுக்குருவிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதுவும் கோடைக்காலங்களிலும், அதிக உயரமான இடங்களிலும் மகரந்தச் சேர்க்கையில் பறவைகளின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தென்னாப்பிரிக்காவில் தாவரத்தின் மகரந்தச் சேர்க்கையில் சால்வியா இனம் கால்வாசி தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை பறவைகளால் நடைபெறுகிறது. அந்தத் தாவரங்களின் பூக்கள் வாசனையற்ற நிலையில் இருப்பதால், தேனீகள் செல்வதில்லை. அதனால் பறவைகளே அதிகமாக மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கைகளின் மூலம் பறவைகள் மனிதர்களுக்கு நேரடியாகப் பயன்தருகின்றன. உணவு அல்லது மருந்திற்காகப் மனிதர்கள் பயன்படுத்துகின்ற தாவரங்களில் 5 சதவிகிதம் பறவைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டே உருவாக்கப்படுகின்றன.
கழுகுகள் மேல்நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும் போது அவற்றின் பார்வை கீழே இருந்து கொண்டே இருக்கும். ஒரு பிணந்தின்னிக் கழுகு, அதன் வாழ்நாளில் 11,600 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்கிறது. கழுகுகள் தெரு நாய்கள் இறப்பை (அதன் கழிவுகளை), சுத்தப்படுத்தும். ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட தெருநாய்களைப் பிணந்தின்னி கழுகுகள் உண்டு சுத்தம் செய்யும். அவற்றைப் பிணந்தின்னிக் கழுகுகள் உண்பதால், அந்த நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கப்படுகின்றது. ஆனால், சமீபகாலமாக அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாகி வருகிறது. இருபது வருடங்களுக்குமுன் வரையிலுமே வானில் நூற்றுக்கணக்கில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பாறு என்று அழைக்கப்படும் பிணந்தின்னிக் கழுகுகள் இன்று மிகச்சொற்ப எண்ணிக்கையிலேயே உயிர் வாழ்கின்றன. அவை இல்லாமல் போனதால் தெரு நாய்கள் இறந்து திறந்த வெளியில் வீசப்படுவதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி, மக்கள் இறப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஆகப்பெறும் துப்புரவாளர்களின் மதிப்பை நாம் உணராமல் போனதற்குத் தரும் விலை இந்த இறப்புக்கள்.
சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் பறவைகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதற்கு விமானத்தை ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இவை மட்டுமல்ல, புதிய கண்டுபிடிப்புகளுக்கு அறிய யோசனைகளை அள்ளித் தருவதோடு சூழலியலுக்கும் தனது பங்குகளை முழுமையாகக் கொடுக்கின்றன பறவைகள். காலநிலை மாற்றத்திற்கான ஆரம்பக்கால எச்சரிக்கையையும் பறவைகளின் செயல்களை வைத்து அறிந்துகொள்ள முடியும்.
இது போன்று பல்வேறு பல காரணங்களுக்காக உலகத்தில் பறவைகளின் இருப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பண்டைக்காலம் முதற்கொண்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும், கடவுளின் ஊர்தியாக உருவகப்படுத்தப்பட்டும் வந்துள்ளனர். அதற்குக் காரணம் நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவற்றின் முக்கியத்துவத்தையும்தம், வாழ்வியலில் பறவைகளின் பங்கையும் புரிந்துகொண்டதே ஆகும். அந்தப் புரிதலை நாம் இழந்துவிட்டதன் காரணமாக தற்போது பல்வேறு இடா்பாடுகளை சந்தித்து வருகிறோம். நன்றியறிதலை மனிதர்கள் மற்ற உயிர்களிடத்திலும் காட்ட வேண்டும். மற்ற உயிர்கள் என்ற வாிசையில் பறவைகளுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஏனெனில், பறவைகள் இல்லாத உலகம் என்றும் நிறைவடையாது.
பறவைகள் தாகம் தீர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன?
ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெயில் கடுமையாக கொளுத்திவரும் வேளையில் தண்ணீரை தேடி பறவைகளும் கால்நடைகளும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்ற வருடம் 2019 கோடை காலத்தில் ஏரி, குளம், குட்டை, கண்மாய்கள், கிணறுகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் வற்றியதை எல்லோரும் அறிவோம். காரணம் 2018 ஆண்டு குறைந்த அளவில் பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் விரைவில் வறண்டது. இதன் காரணமாக விலங்குகளும் பல்லாயிரக் கணக்காண பறவைகளும் நீரின்றி தவித்து உயிரை விட்டது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்..? அனால் மனிதனோ போர்வெல் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி தனது தேவையினை பூர்த்தி செய்து கொள்கிறான். பறவைகளின் நிலைமையினை யோசித்து பாருங்கள் நீருக்கு எங்கே செல்லும் என்று..?
காகங்களுக்கு சோறு வைக்கும் பழக்கம் பொதுவாக நம் கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால் தற்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதுவே!
நண்பர் வீட்டில் நிகழ்ந்த ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன்...
நண்பர் ஒருவர் வீட்டிற்கு வெளியில், கால் பாகம் நீர் உள்ள பக்கெட் இருந்துள்ளது, ஒரு சிறிய பறவை ஒன்று அங்கிருந்த நீரை கண்டதும், பக்கெட்டுக்கு கீழே உள்ள நீரை குடிக்க பலமணி நேரம் போராடி நீரை குடிக்க முடியாமல் தனது உயிரை அந்த நீரிலேயே மூழ்கி உயிரை விட்டது... மனம் வருந்திய அந்த நண்பர், இதன் காரணமாக வீட்டிற்கு வெளியில் உள்ள மரங்களில், வாட்டர் பாட்டில்களை இரண்டாக வெட்டி எடுத்து அதில் நீரை நிரப்பி மரத்தில் கட்டி வைத்து பரவைகளுக்கு நீர் அருந்தச் செய்து வருகிறார் ..
நகர வாசிகள்:
நம் வீட்டின் மொட்டை மாடிகளிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ ஒரு தட்டையான குடுவையில் நீர் வைத்து விட்டால் தாகமுற்ற பறவைகள் வந்து நீர் அருந்திச்செல்லும்... சற்று நிழற்பாங்கான இடத்தில் நீரினை வைத்தால் நன்று... இதை அனைவரும் செய்யலாம்.
கிராம வாசிகள்:
ஒரு மண் சட்டியிலோ அல்லது சிறிய குழியை வெட்டியோ பறவைகளுக்கான நீரை வைக்கும்போது அந்த இடத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்தோமானால், அவை தண்ணீர் அருந்தும்போது எச்சங்களிலிருந்து அங்கு விழும் விதைகள் நன்கு வளர வாய்ப்புள்ளது. நமது கொல்லைப்புறங்களில் இதுபோன்று ஒரு இடத்தை உருவாக்க முடியும். சற்று பெரிய அளவில் நிலங்கள் உள்ளவர்கள் எச்சங்களிலிருந்து விதைகளைச் சேகரித்து தங்கள் நிலங்களில் நடலாம்.
பறவைகள் விதைகளை ஆங்காங்கே பரப்பினாலும், அவற்றில் வளர்ந்து விதைகள் மரங்களாவது மிகவும் சொற்பமே! சரியான நீர் வசதி மற்றும் சூழ்நிலையும் கிடைக்கும் விதைகள் மட்டுமே பல்வேறு காலநிலைகளைத் தாக்குப்பிடித்து மரங்களாகவும், செடி கொடிகளாகவும் வளா்கின்றன. நமது சுற்றுப்புறங்களில் இந்த கோடை காலத்தில், தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதால் பறவைகளின் தாகத்தை தீர்த்த மகிழ்ச்சி ஒரு புறம் கிடைக்கும் அதே வேளையில், பறவைகள் அங்கு விட்டுச் செல்லும் விதைகளும் நம் பூமியில் மரங்களாகும்.
மரங்கள் நமக்கு என்னென்ன பயன் அளிக்கின்றது என்பதை சொல்லி விளக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன்...