மூலவர் : ராஜகோபாலசுவாமி
உற்சவர் : ராஜகோபாலர்
தாயார் : செங்கமலவல்லி
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 1500 வருடங்கள்
பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் காலத்தில் தன்னார்வமிக்க புரவலர்களால் இத்துவாரகை ஸ்தலத்திற்கு அர்பணித்துள்ள அசையா சொத்துக்கள் குறித்த கல்வெட்டு எழுத்துச் சான்றாதாரங்கள், இத்துவாரகை ஸ்தலமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டுள்ளது என்பதும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இத்திருக்கோயிலுக்கென தன்னிகர்வமிக்க புரவலர்களால் அளிக்கப்பட்டுள்ள நிதி மற்றும் பொருட் காணிக்கைகள் அனைத்தும், "இரத்தினகிரஹாரா" எனும் இம்மணிமங்கலம் கிராமத்தில் உள்ள "ஸ்ரீமத்துவராபதி" எம்பெருமானுக்கே சொந்தமானது என்பதை விளக்குகின்றன.
மணிமங்கலத்தின் பெயரானது பல்லவ மன்னர்களது ஆட்சிக் காலத்திலும் , முற்கால சோழ மன்னர்களது ஆட்சிக் காலத்திலும் "இரத்தினகிரஹாரா " என்றே இருந்துள்ளது.
பரகேசரிவர்மன் எனும் மன்னருடைய ஆட்சிக்காலத்திற்கு பின்னர், இவ்வடமொழியான சம்ஸ்கிருத பெயர் "அறவே அகற்றப்பட்டு" சோழ மன்னர்களுக்கு தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
மேலும் முற்காலத்தில் இத்துவாரகை ஸ்தலத்தின் கருவறையில் வீற்றிருக்கும் தெய்வத்திருமேனியின் பெயர் "ஸ்ரீமத்துவாரப்பதி’’ என சமஸ்கிருத மொழியினால் பல்லவ மன்னர்களது ஆட்சிக் காலத்திலும், சோழ மன்னர்களது ஆட்சிக் காலத்தில் "வண்டுவரபதி எம்பெருமான்" என தமிழ் மொழியிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்துவாரகை ஸ்தலத்தின் பெயரானது "ஸ்ரீகாமகோடி விண்ணரகம்" என இருந்துள்ளதையும் தெளிவாக நமக்கு கூறுகின்றன.
இந்திய தென் திருநாட்டில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்று மாநிலங்கள் தனித்தனியே பிரிக்கப்படாத காலகட்டத்தில் இன்றைய தமிழகத்தின் எல்லை வடக்கே வேங்கடம் வரை விரிவடைந்த காலகட்டம். மேற்படி மாநிலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த தென் இந்தியாவாக திகழ்ந்த கால கட்டமாகவும் விளங்கியுள்ளது. பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தினை தலைமையிட கோட்டையாக நிலைபெற செய்து செயலாற்றியுள்ளனர் என்பதை பல்லவர்கால ஆட்சி குறித்த வரலாற்றின் வாயிலாக அறிய முடிகிறது. அப்பல்லவ மன்னர்களது ஆட்சி காலத்தில் தங்களது நிர்வாக ஆளுமைக்குட்பட்ட பகுதியிலேயே இந்திய திருநாட்டின் "தென் துவாரகை" ஸ்தலமாக கருத்திடும் தன்மை வாய்ந்த ஆலயத்தினை இத்தொண்டை மண்டலத்திலுள்ள "இரத்தினகிரஹா" எனும் இம்மணிமங்கலம் கிராமத்தில் நிறுவியுள்ளனர் என்பதும். இந்திய திருநாட்டில் மன்னர்களது ஆட்சி நிலவிய காலத்தில் இந்திய திருநாட்டின் இத்தென் துவாரகை ஸ்தலமானது, காஞ்சியினை ஆண்டு வந்த மன்னர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஸ்ரீவைஷ்ணவர்களினை அங்கத்தினர்களாக உள்ளடக்கிய திருச்சபையின் மூலம் "வைகாசன ஆகம விதிகளின் படி திறம்பட நிர்வகிக்க பட்டுள்ளது" எனும் வரலாற்று சான்றாதாரப் பதிவுகளாக இத்துவாரகையின் கல்வெட்டு எழுத்துப் பதிவுறுத் தகவல்கள் அமைந்துள்ளது.
பல்லவ மன்னர்களின் பிரதான கோட்டையாக காஞ்சி மாநகரம் நிலைபெற்றிருந்த கி.பி 6-7ம் நூற்றாண்டுகளில் இன்றைய ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருமலை ஆலயக் கருவறையில் வீற்றிருக்கும் தெய்வத்திருமேனியின் வலது மேல் திருக்கரத்திலும், இடது மேல் திருக்கரத்திலும் எவ்வித ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக நிலை நின்று அடியார்களுக்கு வரத ஹஸ்தமாக தனது கீழ் வலது திருக்கரத்தினை நிலைநிறுத்தியவாறும், பக்த்தர்களுக்கு காட்சியளித்து வந்ததனையும், இதனால் அக்கால கட்டத்தில் திருமலையில் வீற்றிருக்கும் தெய்வத் திருமேனியானது சைவத் சித்தாந்த கோட்பாடுகளினை தழுவியவரா..? அல்லது வைணவ சித்தாந்த கோட்பாடுகளினைத் தழுவியவரா..? என்பது பெரும் சர்ச்சையாகாவே இந்துக்களாகிய பக்தர்களிடையே ஐயப்பாடுகளுடன் நிலவி இருந்துள்ளது என்பதை, திருமலையின் பண்டைய வரலாற்றின் வாயிலாக இன்று நாம் அறிவோம். இத்தகு சர்ச்சைக்குரிய கால கட்ட சூழலில் "வைகானச ஆகம விதிகளின்படி இம்மணிமங்கலம் கிராமத்திலுள்ள இத் தென் துவாரகை ஸ்தலமானது தனிச்சிறப்பியல்பு மிக்க வைணவத் திருக்கோயிலானது திறம்பட நிர்வகித்து செயல்பட்டு வந்துள்ளது என்பது இத்துவாரகை ஸ்தலத்தின் பழமைக்குரிய மற்ருமொரு வரலாற்றுச் சான்றாதாரமாக உள்ளது.
ஏறத்தாழ 10 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருமலையிலுள்ள திருக்கோயில் "சைவ சித்தாந்த கோட்பாட்டினை தழுவிய திருக்கோவிலா? அல்லது வைணவ சித்தாந்த கோட்பாட்டினை தழுவிய திருக்கோவிலா? என்று நீடித்து வந்த சர்ச்சைக்கு நிரந்தர தீர்வு காண முற்பட்ட பாஷ்யக்காரர் எனும் ஸ்ரீமத் ராமானுஜர் உருவகப்படுத்திய ஏற்பாட்டின் விலைவிற்கு பின்னரே திருமலையில் நிராயுதபாணியாக வீற்றிருந்த தெய்வத்திருமேனியின் வலது மேல் திருக்கரத்தினில் "சக்கரத்தினையும்" இடது மேல் திருக்கரத்தினில் "சங்கினையும்" தரித்திட செய்ததற்கு பிறகே, திருமலையில் உற்றமைந்துள்ளது. வைணவ சித்தாந்த கோட்பாட்டினை தழுவிய ஸ்ரீநிவாஸரது திருமேனியானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சூழலாக உருவானது என்பதனை திருமலையின் பண்டைய வரலாற்று தகவல்களின் வாயிலாக அறிய முடியும். இத்தகு அரியதொரு சர்ச்சையினை திறம்பட தீர்த்து வைத்த "ஸ்ரீமத் ராமானுஜர்" பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் தொண்டை மண்டலத்திலுள்ள பூதபுரி எனும் ஸ்ரீபெரும்புதூர் எனும் இடத்தில் கி.பி.1017ம் வருடம் சித்திரை மாதம் திருவாதிரை நன்னாளில் இக்கலியுகத்தினில் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத் தொண்டை மண்டலத்திலுள்ள மணிமங்கலம் கிராமத்தில் துவாரகை ஸ்த்தலமானது நிறுவப்பட்டுள்ளது என்பதிலிருந்து இத்துவாரகை ஸ்தலமானது எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதனை நம்மால் அறிய உதவுகிறது.
பாஷ்யக்கார் எனும் ஸ்ரீமத் ராமானுஜரது வாழ்வியல் காலத்திற்கு முன்னரே சில நூற்றாண்டுகளாக சோழ மன்னர்களின் வழி வழி வாரிசுதாரர்களின் குடும்ப பாரம்பரியத்தின் மூலம் நேரடி நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் ‘ஸ்ரீ வைஷ்ணவர்களினை’ அங்கத்தினர்களாக உள்ளடக்கிய ஒரு திருச்சபையினால் வைகானச ஆகம சாஸ்த்திர சம்பிரதாய நடைமுறை மரபுகளின்படி மணிமங்கலம் கிராமத்திலுள்ள இத்துவாரகை ஸ்தலமானது மிகைத்திறம்பட நிர்வகிக்கப்பட்டு வந்த காரணத்தினாலும், சோழ மன்னர்களில் சிலர் ராமாநுஜரை தங்களது எதிரியாகவே பாவித்து செயல்பட்டுள்ளதாலும், தங்களது எதிரியாகவே கருத்திடும் சோழ மன்னர்களின் நேரடி நிர்வாக கண்காணிப்பு கட்டுப்பாட்டிலிருந்த இத்தென் துவாரகை ஸ்தலத்திலிருந்து ஸ்ரீமத் ராமாநுஜர் தாமாகவே விலகியிருந்திருப்பார். என்பதும், ஸ்ரீமத் ராமாநுஜர் வாழ்ந்த கால கட்டங்களில் இத்துவாரகை ஸ்தலமானது எவ்வித நிர்வாக சீர்கேடுகளும் இல்லாமல் மிகத்திறம்பட வைகாசன ஆகம விதிகளின்படியும், தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்யப்பிரபந்த சேவைகளுடனும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் முன்னிலையில் அன்றாடம் காலை மற்றும் மாலை நேரங்களில் உரிய வேதசாஸ்திர வித்தகர்களால் ஆராதிக்கப்பட்டு வந்துள்ள இத்துவாரகையில் நிர்வாக சீர்கேடுகளினை களைய வேண்டிய அவசியம் பாஷ்யகாரருக்கு எவ்வாறு ஏற்படும்? என்பதும், சோழ மன்னர்களின் நேரடி நிர்வாக கண்காணிப்பில் இருந்த இத்துவாரகை ஸ்தலத்தின் நிர்வாக சீர்மைக்கு பாஷ்யக்காரர் எனும் ஸ்ரீமத் ராமானுஜர் கற்பிக்க முனைந்த நற்செயல்களினை காட்டிலும், வைகாசன ஆகம விதிகளின் படியும், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளின்படியும் சோழ மன்னர்களது நேரடி கண்காணிப்பில் திறம்பட நிர்வகிக்கப்பட்டுள்ள இத்துவாரகை ஸ்தலத்தின் நிர்வாக சீர்மைகளிலிருந்து இத்துவாரகை உற்றமைந்துள்ள மணிமங்கலம் கிராமத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உற்றமைந்துள்ள பூதபுரி எனும் ஸ்ரீபெருமந்தூரில் அவதரித்த பாஷ்யக்காரர் எனும் ஸ்ரீமத் ராமானுஜர் இத்துவாரகையிலிருந்து கற்றறிந்த போதனைகளே அதிகமாக இருந்திருக்கும் என்பதனை இன்றளவிலும் நம்மால் அறிந்திட இயல்கிறது. இது இத்துவாரகையின் பழமைக்குரிய சான்றாக உள்ளது.
இந்திய திருநாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த ஏறத்தாழ சுமார் 200 ஆண்டுகளில், இந்திய திருநாட்டிலுள்ள மக்களை அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேயர்கள் இந்து சமய இறைவழிபாட்டு நம்பிக்கையினை தழுவியிராமல், கிறிஸ்தவ சமய இறைவழிபாட்டு நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்த காலத்திலும் கூட, இந்திய திருநாட்டின் தென்துவாரகை ஸ்த்தலமாக விளங்கிய மணிமங்கலம் கிராமத்திலுள்ள துவாரகை ஸ்த்தலத்தில் இருந்த தொல்லியல் சிறப்பு மிக்க சோழமன்னர்களது ஆட்சி கால கல்வெட்டு எழுத்துக்ககள் இந்திய திருநாட்டின் பண்டைய வரலாற்று தகவல்களினை இத்தலைமுறை இளைஞர்களும் ஆராய்ந்து கற்றுக்கொள்ள சான்றாதாரமாக அமைத்து "சிதையுறா நிலையில் பேணியுள்ளனர்" எனபது இத்தென்துவாரகை ஸ்த்தலத்திலுள்ள கல்வெட்டு எழுத்துக்களின் பதிவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள ஆறு கருத்துக்களும் இத்திருக்கோயிலின் பழமையான வரலாற்று சிறப்பு தன்மைகளை கொண்டுள்ள நமது கிராமத்தின் அரும்பெரும் பொக்கிஷம் என்பதனை ஒவ்வொரு இந்து பக்தர்களும் உணர்ந்து, இவ்வைணவ ஆலயத்தில் இறைதரிசனம் செய்திட முனையும்போது, இங்கு பக்த்தர்களுக்கு காட்சி தரும் வண்ணம் நிலைபெற செய்துள்ள ஒவ்வொரு தெய்வத் திருமேனியானதும், எத்தகு வைணவ சித்தாந்த கருத்துக்களினை இந்திய சிற்பக்கலையின் வாயிலாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்பதையும், ஒவ்வொரு தெய்வத் திருமேனியானதும், இந்துக்களாகிய பக்தர்கள் ஒவ்வொரு மாதத்தில் எந்தெந்த திதிகள் மற்றும் நட்சத்திர தினங்களில் வழிபடுவதற்கு உகந்த தெய்வத் திருமேனிகளாக உள்ளன எனும் தகவல்களையும் ஒவ்வொரு பக்தர்களின் விழிகளுக்கும் காட்சிப்படுத்திட நமது முன்னோர்கள் மதிநுட்பம் வாய்ந்த இந்திய சிற்பக் கலை மற்றும் கட்டிட கலையினை "சமயம் சார்ந்த கருதுருத் தகவல் பரிமாற்றத்திற்குரிய சிறந்த அக்கால கட்டத்தின் அறிவியல் வளர்ச்சியின் விளைவான ஊடகமாக பயன்படுத்தி இத்துவாரகை ஸ்தலத்தினை வடிவமைத்து பகவத் கீதையின் பிரதான சாராம்சமாகிய சரனாகதி தத்துவத்தின் மேன்மையின் புனிதத்துவத்தினை நேர்த்தியாக திறம்பட இந்துக்களாகிய பக்தர்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளனர். இத்தொண்டை மண்டலத்திலுள்ள எந்தஒரு வைணவ ஆலயங்களுக்கும் இல்லாத சிறப்பியல்புத்தன்மை இத்துவாரகைக்கு மட்டுமே உண்டு என்பதனை அறுதியிட்டு இந்துக்களாகிய பக்தர்களுக்கு உணர்த்திடும் வண்ணம், இத்துவாரகை ஸ்தலத்தினை வடிவமைத்து, இத்துவாரகையில் திருவடி பதிக்கும் ஒவ்வொரு பக்தர்களும் இக்கலியுகத்தில் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள சரீரத்துடன் 1 முதல் 107 வைணவ திவ்ய தேசத்து எம்பெருமானையும் நேரில் சென்று இறைதரிசனம் செய்த நற்பேற்றினை பெற்றிடுவது திண்ணம் என தெளிவாக எடுத்துரைக்கும் வண்ணம் இத்துவாரகை ஸ்த்தலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறியமுடிகிறது. இத்துவாரகை ஸ்தலத்தினில் திருவடி பதிந்த ஒவ்வொரு வைணவ அடியார்க்கும் இக்கலியுகத்தினில் கிடைத்துள்ள அரும் பேறாகும்.
சில வலைத்தளங்களின் தகவல்கள் பின்வருமாறு
மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜகோபாலசுவாமி நின்ற கோலத்தில் பத்ம விமானத்தின் கீழ் காட்சியளிக்கின்றார். இடது கையில் தண்டாயுதம் இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். இவருக்கான உற்சவர், வலது கையில் சக்கரம், இடக்கையில் சங்கு வைத்திருக்கிறார். சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின் மேலே, பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் சிற்பம் இருக்கிறது. கிருஷ்ணருக்கான தலம் என்பதால், இங்கனம் வடிவமைத்துள்ளனர். தாயார் செங்கமலவல்லிக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆண்டாளுக்கும் தனிச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் தலம், சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூருக்கு அருகில் இருக்கிறது. இராமானுஜர், இங்கு வந்து ராஜகோபாலரை தரிசித்துச் சென்றுள்ளதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. பெருமாள் சன்னதி உள் சுற்றுச் சுவரில் தெட்சிணாமூர்த்தி, நர்த்தன கிருஷ்ணர், நரசிம்மர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளது.
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்களுக்கு நன்கு பால் சுரக்கவும், ஸ்ரீ ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், வைகுண்ட ஏகாதசி நாட்களிலும் இவருக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்து, பசுக்களை மேய்த்ததால் இவர், "ராஜகோபாலர்' என்று பெயர் பெற்றார்.
வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் வருடந்தோறும் 9 நாட்கள் நடைபெறும் நவராத்ரி சிறப்பு வாய்ந்ததாகும்
சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு வஸ்திரம், துளசி மாலை அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
ராஜகோபாலர் கோயிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோயிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், "அஞ்சலி வரத ஆஞ்சநேயராக' காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவதுசிறப்பு. ஆஞ்ச நேயரின் மார்பில் ராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும், குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.இவர் தவிர, கோயில் முன்மண்டபத்தில் ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக, ஆஞ்சநேயர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.
இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம்-ஸ்ரீபெரும்புதூர் வட்டம்-மணிமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அனைவராலும் தாமரைக் கன்னியம்மன் திருக்கோயில் "குளம்" என பரவலாக கருதப்பட்டு வரும் புஷ்கரணியின் (திருக்குளத்தின்) பண்டைய புனிதத்துவம் மற்றும் மகத்துவம் குறித்த தகவல் யாதெனில்,
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மீது பற்றுகொண்டுள்ள இந்துக்களாகிய பிரதான வழிபாட்டு ஸ்தலமாக இன்றளவில் கருதப்பட்டு வரும் ஆந்திர பிரதேச மாநிலம் திருமலையில் உள்ள வைணவ ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் முதலில் அங்குள்ள புனித தீர்த்தக் குளத்தில் "நீராடிவிட்டு" முதலில் அத்தீர்த்தக் கரையினில் உள்ள "ஸ்ரீவராஹர் சன்னதியினை தரிசித்த பிறகே" அவ் வைணவ ஆலயத்தின் உள்ளே நுழைந்து கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசரை தரிசிக்கும் மரபுகளே தொன்று தொட்டு இந்துக்களாகிய பக்தர்களால் பின்பற்றப்பட்டு வரப்படுவதனை நாம் அனைவரும் அறிவோம். இவ் வழிபாட்டு செயல் நடைமுறையினை அடிப்படையாக கொண்டவாறே, தொன்று தொட்டு இம்மணிமங்கலம் கிராமத்திலுள்ள இத்துவாரகை ஸ்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் முதலில் இத்திருத்தலம் அமைந்துள்ள அக்ரஹார வீதியின் நுழைவுப் பகுதியில் வீற்றிருக்கும் "சிறிய திருவடிகள் எனும் "பக்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு" அருகில் உள்ள சிறிய சாலையினை பயன்படுத்தி நடந்து சென்று அங்குள்ள பிரம்மாண்ட "புனித தீர்த்தக் குளத்தில்" ஓவ்வொரு இந்து பக்தர்களும் தங்களது பாதங்களினை சுத்திகரிப்பு செய்து கொண்டும் அப்புனிதத் தீர்த்தக் குலத்தினில் " ஒவ்வொரு இந்து பக்தர்களும் தங்களது பதங்களினை சுத்திகரிப்பு செய்து கொண்டும் அப்புனித தீர்த்தக் குளத்திலுள்ள நீரை தத்தம் தலையில் தெளித்து கொண்டும் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மரபுகளின்படி முதலில் "சிறிய திருவடிகள் " எனும் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு பிறகு இத்துவாரகை ஸ்தலத்தின் முகப்பு வாயிலினை அடைவதனையே நமது பாரம்பரிய வழிபாட்டு மரபாக நமது முன்னோர்களால் நிலைபெற செய்துள்ளனர் என்பதனை அறிந்திட இயலும் .இத்தகு நடைமுறை பின்பற்றுவதன் வாயிலாக இம்மணிமங்கலம் கிராமத்திலுள்ள இப் பிரம்மாண்ட புனித தீர்த்தக் குளத்தின் சமய தன்மையுடன் கூடிய புனிதத்துவத்தினை ஒவ்வொரு இந்துக்களும் உணர்ந்துகொள்ள இயலும்.
அதாவது இம்மணிமங்கலம் கிராமத்திலுள்ள துவாரகை ஸ்தலத்தின் கருவறையில் வீற்றிருக்கும் "ஸ்ரீமத் துவராபதி " எம்பெருமானின் தீர்த்தவாரிக்குரிய உற்சவர் திருமேனியானது ஆண்டிற்கு ஓரிரு முறை இப்புனித தீர்த்த குளத்தில் "தீர்த்தவாரி ஸேவை " கண்டருளப்பட்டு வந்ததனாலும் இவ் வைணவ ஆலயத்திலுள்ள "சக்கரத்தாழ்வார்" திருமேனியானதும் இப்புனிதத் தீர்த்த குளத்தில் "தீர்த்தவாரி ஸேவை " கண்டருளப்பட்டு வந்ததனாலும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நீராடும் இப்புனிதத் தீர்த்தக் குளத்திலுள்ள நீரின் தன்மை மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததென இந்துக்கள் அனைவரும் கருத்தியதனாலேயே "இப்புஷ்கரணி" அதாவது இப்புனிதத் தீர்த்தக் குளமானதும் அதில் நிறைந்துள்ள நீரானதும் அளப்பரிய விசேஷ குணம் கொண்டது என்பதால் தொன்று தொட்டு இக்கிராமத்தில் வசித்து வரும் இந்துக்கள் அனைவரும் சமுதாய பேதமின்றி தத்தம் குடும்பங்களில் உள்ள உறவின் முறை தொடர்புகளில் எவரையேனும் மரணத்தின் வாயிலாக இறைவனடி திருவடிகளில் சென்றடைந்ததாக கருதிடும் தருணங்களில், அவ் இறந்தோர்களுக்கென செய்யப்படும் ஈமக் கிரியைகளில் பிரதானமானதாகக் கருதப்படும் 16ம் நாள் "காரிய நிகழ்ச்சி நிரலினை" இப்புனிதத் தீர்த்தக் குளக்கரையினில் அரங்கேற்றிடுவதனையே பண்டைய மரபாக இன்றளவிலும் பின்பற்றுவதிலிருந்து நாம் அறிந்திட இயலும். இத்தகு நிகழ்ச்சி நிரலினை இப்புனிதத் தீர்த்தக் குளத்தின் மகத்துவத்தின் வாயிலாக எளிதாக அடைந்திடுவர் என்பது திண்ணம் எனும் கருத்துத் தகவலினை மையப்படுத்தியே இச்செயல் நிகழ்வுகளினை இப்பூஷ்கரணியில் இன்றளவிலும் அரங்கேற்றப்படுகிறது என்பதனை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள இயலும். இதுவே மணிமங்கலம் கிராமத்திலுள்ள இப்புனிதத் தீர்த்தக் குளத்திற்குரிய அரும் பெருமையாகும்.
Home புகைப்பட தொகுப்பு