மூலவர் : தர்மேஸ்வரர்
அம்மன்/தாயார் : வேதாம்பிகை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம் : சிவபுஷ்கரிணி
ஆகமம்/பூஜை : சிவாகமம்
புராண பெயர் : வேதமங்கலம்
பழமை : 2000 வருடங்கள்
இத்திருக்கோவிலில் மாதம் இருமுறை வரும் பிரதோஷங்கள் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியாகும். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களும் ஏராளமாக கலந்துகொள்வர். சிவராத்திரி நாட்களில் நடராஜரின் பரதத்தை போற்றும் வகையில், பல்வேறு பரதக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது சிறப்பாகும்.
இத்திருக்கோவிலில் சிவன் சன்னதிக்கு எதிரேயுள்ள நந்தி சிலை, கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது தட்டும்போது வெண்கல ஓசை எழுவதாக கூறப்படுகிறது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இத்திருக்கோவில் நிர்வகிக்கபட்டு வருகிறது. சிவன் சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் தனித்தனி கோயில்கள் அமைத்துள்ளனர்.
கோவில் உள்ளேயும் பிரகாரத்திலும் சதுர்வேத விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகன், அனுக்கை விநாயகர், பைரவர், சனீஸ்வரர், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வத்திருமேனிகள் உள்ளன.
உலகத்தில் தர்மம் தழைக்கவும், நீதி கிடைக்கவும் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி மற்றும் கலைகளில் சிறக்க அம்பிகை, சதுர்வேத விநயாகரை வழிபடுகிறார்கள்
இத்திருக்கோவிலில் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கும் மற்றும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.
கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்துள்ள ஸன்னதியில் சிவன், சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சியளிக்கின்றார். இது போன்று அமைக்கப்பட்டுள்ள விமானங்கள், தரையிலிருந்து ஸன்னதியுடன் சேர்த்துதான் கட்டப்படும். ஆனால், இத்திருக்கோவிலின் ஸன்னதியின் மேல் பகுதி மட்டும் கஜபிருஷ்ட அமைப்பில் (அதாவது யானையின் பின்பகுதி போன்ற அமைப்புடன்) கட்டப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இங்கு சுவாமியிடம் வேண்டிக் கொள்ள, தர்மம் செய்யும் எண்ணம் உண்டாகும். அதர்மம் இழைக்கப்பட்டவர்கள் இவரை வழிபட, நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புரட்டாசி மாத பவுர்ணமியன்று, இவருக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு. மார்கழி திருவாதிரையன்று விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று இரவில் பல ஆயிரக்கணக்கில் தீபங்களை ஏற்றி வழிபடுவதும் சிறப்பாகும்.
வேதங்களின் தலைவியாம் அம்பாள் வேதநாயகி அம்மன் தனிச்சன்னதியில், சதுர பீடத்தில் நின்றபடி இருக்கிறாள். இவள் வேதங்களின் இருப்பிடமாக இத்தலத்தில் அருள் புரிவதால் இப்பெயரில் அழைக்கப்படுகின்றாள். பவுர்ணமிதோறும் அம்பாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பாள். புரட்டாசி மாதங்களில் பவுர்ணமியன்று இவளது ஸன்னதியில் ''நிறைமணிக்காட்சி'' வைபவம் நடப்பது வழக்கம். அப்போது தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்றவற்றை சன்னதி முன்மண்டபத்தில் கட்டி அலங்காரம் செய்கின்றனர். இதுபோன்ற தரிசனங்களை கண்டால், பசி, பட்டினி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோவிலில் ஆடிப்பூரம், நவராத்திரி, ஆடி, தை வெள்ளி, சித்ராபவுர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. கல்வியில் சிறக்க பக்தர்கள் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்வது வழக்கம்.
சதுர்வேத விநாயகர்: அரிதாக சில சிவன் கோயில்களில்தான், ஒரே ஸன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அடுத்தடுத்து இருப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால் மணிமங்கலத்தில் ஒரே ஸன்னதியில் வரிசையாக நான்கு விநாயகர் திருமேனிகளை தரிசிக்கலாம். ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும், இங்கு விநாயகரை வழிபட்டதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மேற்கு பகுதியில், படப்பந்துறை என்றழைக்கப்பட்ட ஒரே ஸன்னதியில் நான்கு விநாயகர்களும், அடுத்தடுத்து காட்சி தருகிறார்கள். இந்த நான்கு விநாயகருக்கும் பொதுவாக எதிரில் ஒரு யானை வாகனம் அமைக்கப்பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று இங்கு வீற்றிருக்கும் நான்கு விநாயகர்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கோயில் பிரகாரத்தில் பின்புறம் மேற்கு பகுதியில் இரண்டு திசைகளிலும், இரண்டு விநாயகர்கள் இருக்கின்றார்கள். இதில் ஒருவருக்கு வெண்ணிற வஸ்திரமும், மற்றொருவருக்கு காவி நிறத்தில் வஸ்திரமும் அணிவிப்பது சிறப்பாகும்.
முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்ததாக வரலாறுகள் கூறப்படுகிறது. சிவபக்தனான அப்பல்லவ மன்னன், தானதருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கினான். மன்னனுக்கு சிவன் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக, அம்மன்னனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எவ்விடத்தில், எப்படி திருக்கோயில் அமைப்பது என மன்னனுக்குத் தெரியவில்லை.
ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அந்த மன்னனிடம் சென்றார். தான் பரம ஏழை என்பதாகவும், தனக்கு ஏதேனும் தானதர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான். அப்போது அந்த அடியார், ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு சிவன் கோவில் எழுப்பி தானமாக தரும்படி கேட்டுக்கொண்டார். மன்னன் இதைக் கேட்டு வியந்து நின்றான். அப்போது, அடியாராக வந்த சிவன் தனது சுயரூபம் காட்டியருளினார். மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், சிவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்திலேயே கோவில் எழுப்பினான். சுவாமிக்கு, ''தர்மேஸ்வரர்'' எனவும் பெயர் சூட்டினான்.