மண், சாணத்துக்கு அடுத்தது செடி வளரத் தேவையான தொட்டி. இதற்காக அதிக செலவு செய்து புதுத் தொட்டிகளை வாங்கத் தேவையில்லை. வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம். லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில், பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும். காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்கள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம். இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.
புதிதாக வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள், அனைத்து காய்கறிகளையும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், 25 நாட்களில் அறுவடையாகும் கீரையிலிருந்து தொடங்கலாம். அதில் அனுபவத்தை வளர்த்துக் கொண்ட பிறகு மற்ற காய்கறிகளை விதைக்கலாம். மாடித்தோட்டத்துக்கும் பட்டம் உண்டு. எல்லா ஊரிலும் எல்லா காய்கறிகளும் வளரும் என்றாலும்... சில ஊரில் சில பயிர்களின் வளர்ச்சி மந்தமாக இருக்கும். அதை ஈடுசெய்ய நிழல்வலைப் பந்தல், மூடாக்கு போன்ற சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.
முதலில் கீரை சாகுபடியைப் பற்றி பார்ப்போம். வீட்டுத் தோட்ட விவசாயத்தில் மண் மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தொட்டிக்கு ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு எரு என்கிற விகிதத்தில்தான் கலந்து போட வேண்டும். செம்மண் அல்லது வண்டல் மண்ணைத் தரையில் கொட்டி, கல், கட்டிகளை அகற்றி பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், தென்னை நார்க்கழிவை (காயர் பித்) வாங்கி, மண்ணில் கலந்துகொள்ளலாம். ஒரு தொட்டிக்குத் தேவையான மண், மணல் மற்றும் உரத்துடன் 50 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றையும் கொட்டிக் கலந்து தொட்டியில் முக்கால் பங்கு நிரப்ப வேண்டும். பிளாஸ்டிக் வாளிகளாக இருந்தால், அவற்றின் அடிப் பகுதியில், சுற்றிலும் கோணி ஊசி புகும் அளவுக்கு 12 இடங்களில் சிறு துவாரங்கள் இட வேண்டும். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரில் தேவைக்கு அதிகமான தண்ணீர் வடிய இந்தத் துவாரங்கள் அவசியம். தொட்டிகளில் மண் நிரப்பி தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்தால், மூன்றாவது நாள், மண் ஈரத்தன்மை குறைந்து காணப்படும். அதில் விதையையோ அல்லது நாற்றையோ நடவு செய்யலாம்.
கிச்சனில் இருக்கு, கீரை விதை!
அடுத்து 'விதைக்கு எங்கே போவது?’ என்ற கேள்வி எழும். ஆரம்ப கட்டத்தில் சமையலறையில் உள்ள வெந்தயத்தையே விதைக்கலாம். ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உடைய இந்தக் கீரையை விதைக்க... கையளவு வெந்தயத்தை எடுத்து சுத்தப்படுத்தி, மண் நிரப்பி தயாராக உள்ள பக்கெட்டில் தூவி விதை மறையும்படி மண்ணைக் கிளறி விட்டு பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும். அடுத்த நான்கு நாட்களில் கீரை துளிர்க்கும். இப்படித் துளிர்த்து வரும்போது வெந்தயக்கீரைக்கு வெயில் அதிகம் இருக்கக் கூடாது. தென்னை ஓலை அல்லது நிழல்வலை மூலமாக வெயிலைக் குறைக்கலாம். களைகள் தென்பட்டால் கையால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். 10-ம் நாளில், 100 கிராம் மண்புழு உரத்தை மேலுரமாகத் தூவிவிடவேண்டும் (இது நர்சரிகளில் கிடைக்கும்). தினமும் நீர் தேங்காத அளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், கீரை 'தளதள’ என வளர்ந்து, 25-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும்
தொடர்ந்து, பாலக் கீரை, கொத்தமல்லித்தழை, அரைக்கீரை, சிறு கீரை, மணத்தக்காளி போன்ற கீரைகளையும் தொடர் அறுவடை கொடுக்கக்கூடிய செங்கீரை, புதினா போன்றவற்றையும் வளர்க்கலாம். கீரை விவசாயத்தை வெற்றிகரமாக முடித்து அனுபவம் பெற்ற பிறகு, காய்கறி விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்தலாம்.
நிழல்வலையில் கவனம்!
மண் நிரப்பிய வாளியை மாடியில் வைக்கும் போது, நேரடியாகத் தரையில் வைக்கக்கூடாது. மூன்று செங்கற்களை அடுப்பு போல கூட்டி அதன் மீது வைக்கலாம். நிறைய தொட்டிகளை வரிசையாக வைக்கும்போது நீளமான மரப்பலகையின் மீது தொட்டிகளை வைக்கலாம். கீரைகள் வளர்க்க மிதமான சீதோஷ்ணம் தேவை. நன்றாக வெயில் கொளுத்தும் மாதங்களில் பகல் நேரங்களில் கீரைத் தொட்டிகள் மேலே நிழல் வலை அமைக்க வேண்டும். மாலை நேரங்களில் பந்தலை விலக்கிக் கொள்ளலாம்.
கோடை காலங்களில் நிழல்வலை பயன்படுத்தினால், அதிக மகசூல் எடுக்கலாம். 10 லிட்டர் ஆயில் பக்கெட்டில், 5 கிலோ கீரை மகசூல் கிடைக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வழியாதபடி தார்பாலின் பந்தல் அமைத்துக் கொள்ளலாம்.
முட்டைஓடு... பூச்சியே ஓடு!
மாடித்தோட்டத்தில் பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் தென்பட்டால், முட்டை ஓட்டுத்தூளுடன், சிறிது உப்பைக் கலந்து பக்கெட்டை சுற்றிலும் வளையம் போட்டால் பூச்சிகள் அண்டாது.
மாடித்தோட்டம் என்றால் என்ன ?
நம் வீட்டின் மாடியில் செடி, கொடி, பூ, காய் கனிகளை வளர்ப்பது. அதுமாடியாகவோ, பால்கனியாகவோ இருக்கலாம். முன்பு வீட்டைச்சுற்றியிருந்ததோட்டத்திற்கு இடம் இல்லாமல் போனதால் அதை மாடிக்கு மாற்றம்செய்துவிட்டோம். நிலம் வாங்கி பயிர் செய்யும் பிரச்சனைகள் இதில் இல்லாதது,இதை வரவேற்கத்தக்கதாக மாற்றியுள்ளது.
மாடித்தோட்டம் எங்கு அமைக்கலாம்?
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி மாடி வீடுகள், அலுவலக வளாகங்கள் ஆகியஇடங்களில் இடங்களில் அமைக்கலாம். மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன்செய்ய வேண்டியது என்ன? மொட்டைமாடியில் உள்ள தண்ணீர் வீட்டிற்குள் கசிந்துவிடாதபடி வாட்டர் ப்ரூப் பூச்சு கொண்டு பூசி தயார் செய்து கொள்ள வேண்டும்.
செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லது கட்டிடத்திற்கோ என்னபாதிப்புகள்வரும்?
ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்) ஆபத்தானவை. இவ்வகை செடிகள்தரையை துளைத்து கட்டிடத்தை சேதமடையச் செய்துவிடும். ஜல்லிவேர்கள்கொண்ட செடிகளே நாம் மாடித்தோட்டத்தில் வளர்ப்பதற்கு சிறந்தவை. நாம்மாடித்தோட்டத்தில் பயிரிடும் பெரும்பாலன காய்கறிகள், பழங்கள் ஆகியவைஜல்லி வேர் கொண்டவைகளாகும்.
மாடித்தோட்டம் வளர்ப்பதினால் நமக்கு என்ன பயன்?
நாம் அனைவரும் அதிகப்படியான வேலைப் பளுவினால் உடலாலும், மனதாலும்மிகவும் சோர்வடைகின்றோம். முக்கியமாக மனச்சோர்வடையும் போது நமக்குமாடித்தோட்டம் அருமையான நண்பனாகவும், நமக்கு பெரும் மனஅமைதியையும் மற்றும் புத்துணர்ச்சியையும் தருகின்றது. நாம் பார்த்து, பார்த்துவளர்க்கும் ஒவ்வொரு செடியும், அதன் வளர்ச்சியை காணும்போது மனதுக்குகிடைக்கும் தன்னிறைவும், சந்தோசமும் அளிக்கின்றது. மேலும் இதுவே நமக்குவரும் பெரும்பாலான நோய்களை விரட்டுகிறது.
நமது வீட்டை வெயிலின் வெட்கையிலிருந்து ஐந்து முதல் பத்து டிகிரி வரைகுறைத்து இயற்கையான ஏசியாக செயல்படுகிறதுஅதிக வெயில், குளிர் மற்றும்இரைச்சலிலிருந்து வீட்டை பாதுகாக்கிறது
நாமே வளர்த்த சத்தான காய்கறிகள், கீரைகள் பிரஷ்ஷாக கிடைக்கிறது. நம்குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம் ஏற்படுகிறது. அவர்களும் நம்மிடமிருந்து நல்லவிசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். விவசாயிகளின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்து கொள்வதோடு இயற்கையோடு வாழ பழகிக் கொள்கிறார்கள். மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதைவிட அதிகப்படியான உடற்பயிற்சி, சுத்தமான காற்றும் நம் வீட்டிலேயே கிடைக்கிறது.